தீப வழிபாட்டின் மகத்துவம்

தீப வழிபாட்டின் மகத்துவம்

கிரகங்கள் தொடங்கி ஓருயிர் ஜீவன்கள் வரை இயங்குவது உஷ்ணத் தினால் என்கிறது அறிவியல். தீபம் என்றால் ஆதி உருவைத் தீயில் காண்பது என்று பொருள். `தீபம்' என்ற சொல்லே மனத்தில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கும் உற்சாகச் சொல்லாகிறது. அதுதான் தீபத்துக்கான மகத்துவம்.

கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

தீப ஜோதியே நமோ நம!

இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

ஞாயிறு- கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள்- மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன்- குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி- வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்.